விரைவில் பழனியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை - துணை முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று தஞ்சை கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று பவன் கல்யாண் வழிபாடு நடத்தினர். மேலும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்றும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சனாதன யாத்திரையை தொடங்கினால் நிச்சயம் அறிவித்துவிட்டுதான் செய்வேன், அறுபடை முருகன் கோவிலுக்கு செல்வதற்காக வந்துள்ளேன் என்றார். இந்நிலையில் இன்று மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழிபாடு செய்த, பவன் கல்யாண் பின்னர் அங்கிருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு சென்றார்.
ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற பவன் கல்யாணுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பவன்கல்யாணும் அவரது மகன் அகிரா நந்தனும் உச்சிகால பூஜையில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாணுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பவன்கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தான் மேற்கொண்டுள்ள ஆன்மிக பயணம் மிகவும் மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் கடவுளிடம் எப்போதும் வேண்டுவேன் என்றும் தற்போது பழனி முருகனிடமும் அதைத்தான் வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பழனியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு தினமும் பேருந்து இயக்கப்பட்டதும், கொரோனா காலத்தில் அந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதும் தற்போதுதான் தனக்கு தெரியவந்ததாக கூறிய பவன் கல்யாண், மீண்டும் இந்த பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக ஆந்திர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பழனி திருப்பதி பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பவன் கல்யாண் உறுதி அளித்தார். பழனியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் சேவை வேண்டுமென்ற கோரிக்கை குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பவன் கல்யாண் உறுதி அளித்தார்.
அதுமட்டுமின்றி திருப்பதி தரிசனம் தொடர்பான சேவைகளுக்கான டிக்கெட்டுகளை புக் செய்யும் வகையில் பழனியியில் தகவல் மையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.