துணை முதல்வர் போஸ்டர் விவகாரம் : செல்வப்பெருந்தகை விளக்கம்!

செல்வப்பெருந்தகை பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டினர். அதில் காங்கிரஸ் மாநில செயலாளர் ஷெரிப் ஒட்டி போஸ்டர் விவாதத்திற்கு உள்ளானது. அந்த போஸ்டர்களில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு.. 2026 இன் துணை முதல்வரே என குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு விவகாரம் குறித்த திருமாவளவன் பேச்சு சர்ச்சையை உண்டாக்கி இருந்தது. தற்போது செல்வப்பெருந்தகையை முன்னிறுத்தி இப்படியான போஸ்டர் வெளியிடப்பட்டது பேசு பொருளானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செல்வப்பெருந்தகை, போஸ்டர் ஒட்டிய நிர்வாகி விளக்க அளிக்க நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “குறிப்பிட்ட போஸ்டர் விவகாரத்தில் காங்கிரஸில் யாருக்கும் உடன்பாடு கிடையாது. ஆர்வக் கோளாறில் ஒரு நிர்வாகி அவ்வாறு செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்க அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தவறு என்றால் தவறுதான்.
தமிழகத்தில் தற்போது ஆர்எஸ்எஸ் மற்றும் மதவாதிகளால் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஆகவே, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள யாரும் உடன்படக்கூடாது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. அந்த போஸ்டர் ஒட்டியவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து எப்படி தீர்ப்பு பெறப்பட்டதோ, அதேபோல வக்ஃபு சட்டத்திற்கு எதிராகவும் வாதாடி நீதி கிடைக்கச் செய்வோம்” என்று தெரிவித்தார்.
அண்ணாமலை மீண்டும் செருப்பு அணிந்துவிட்டாரே என்ற கேள்விக்கு, “உண்மையே பேசத் தெரியாதவர்கள் பாஜகவினர். டெல்லியில் தமிழக மக்களைப் பார்த்து நாகரீகமற்றவர்கள் என்று கூறுகிறார்கள் என்றால் அவர்களின் தரத்தை புரிந்துகொள்ளுங்கள்” என்றும் தெரிவித்தார்.