வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அதீத கனமழை எச்சரிக்கை !

தமிழகத்தில் கடந்த சில நாட்காக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் பரவலாக மழை பெய்தது. எனினும் பகலில் வெயில் நிலவி வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
மேலும், ஆந்திரா, தெலுங்கானா, தெற்கு ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்றும், மேலும் பல்வேறு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
newstm.in