முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் டில்லி முதல்வர் தங்க மாட்டார்; பா.ஜ., அறிவிப்பு..!

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வரலாற்று வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. டில்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
இந் நிலையில்,முதல்வராக பதவியேற்பவர் கெஜ்ரிவால் புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் தங்க மாட்டார் என்று டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவ் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
இது குறித்து துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கும் அவர், பா.ஜ., தலைமையிலான அரசு இந்த சொத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யும். ஆடம்பர மாளிகையை விரிவுபடுத்தும்போது அதனுடன் இணைக்கப்பட்ட 4 இடங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரோகிணி தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாஜி எதிர்க்கட்சி தலைவருமான விஜேந்தர் குப்தா துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு இதேபோன்று ஒரு கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறி உள்ளதாவது; ஏற்கனவே இருந்த 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட முதல்வர் இல்லம் 50,000 சதுர அடியாக விரிவுப்படுத்தப்பட்டது. ஆடம்பரமாக விரிவுப்படுத்த இந்த மாளிகைக்காக அருகில் இருந்த அரசு இடங்கள் முதல்வர் இல்லத்துடன் இணைக்கப்பட்டன.
இந்த இணைப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது. உரிய அனுமதியுடன் பெறப்படவில்லை. எனவே அவை மீண்டும் முந்தைய நிலைக்கே மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த முதல்வர் மாளிகை கெஜ்ரிவால் காலத்தில் பலகோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. எளிமையானவர் என்று கூறியவர், பலகோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மாளிகையில் வசித்தது எப்படி என்ற பிரசாரத்தை தேர்தலின் போது பா.ஜ., முன் வைத்தது குறிப்பிடத்தக்கது