எம்.எஸ். தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு! ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாள்கள் சிறை தண்டனை!
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைக் கூறியதாக தனியார் தொலைக்காட்சி எதிராக மகேந்திர சிங் தோனி வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தோனி தரப்பில் முறையிடப்பட்டு இருந்தது.இதனையடுத்து, தோனி தரப்பில் எழுப்பப்பட்ட 17 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதவேன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தோனிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை செய்தியாக வெளியிடும் போது, மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் கூறியுள்ள கருத்துக்கள், நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேல் முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.