வேதா இல்லத்தை வேகமா ஒப்படைங்க.. சென்னை கலெக்டருக்கு தீபக், தீபா கோரிக்கை..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை ஒப்படைக்கக் கோரி, அவரின் உறவினர்களான தீபக் மற்றும் தீபா ஆகியோர் சென்னை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. முந்தைய அரசின் அந்த நடவடிக்கை செல்லாது என்றும், அதனை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், ‘அந்த இல்லத்தை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க, மூன்று வாரத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும்’ என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ‘போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த இல்லத்தின் சாவியை விரைவாக தங்களிடம் ஒப்படைக்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் சென்னை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைக்கு, அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சென்னை மாவட்ட கலெக்டர் பதில் அளித்துள்ளார்.