குற்றால அருவிகளில் முன்கூட்டியே எச்சரிக்கும் சென்சார் வைக்க முடிவு..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவி தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ந்து கனமழையின் காரணமாக அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து செல்லப்பட்டவர்களை அங்கிருந்த பொது மக்கள் காப்பாற்றியுள்ளார்.இருப்பினும் இதில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றால அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவியில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர் வரத்து கண்காணிப்பு, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி, பழைய அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குற்றால அருவிகளில் திடீர் காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க சென்சார்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது.அசம்பாவிதம் மீண்டும் நடக்காமல் தடுக்க குற்றால அருவி பகுதிகளில் மழை, காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க விரைவில் சென்சார் 3 கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்சார் அமைப்பதற்காக சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருவி பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதிகளில் பொருத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.