1. Home
  2. தமிழ்நாடு

கழுத்தை நெரித்த கடன் : 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினர்!

1

திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரில் ஜோசப் என்பவரின் மகன் அலெக்ஸ் (42). இவருக்கும் விக்டோரியா (35) என்பவருக்கும் திருமணமாகி ஆராதனா (9), ஆலியா (3) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இன்று காலை வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். படுக்கையறையில் குழந்தைகள் ஆராதனா மற்றும் ஆலியா விஷம் அருந்தி இறந்து கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. விக்டோரியா ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆராதனா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

அலெக்ஸ்க்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூரில் உள்ள அவரது அம்மாவிற்கு கேன்சர் நோய்க்காக மருத்துவமனை செலவு செய்ததில் ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அவரது தம்பிக்கு தொழில் செய்வதற்காக கடன் வாங்கி கொடுத்ததை திரும்ப கொடுக்க முடியாமல் போனதாகவும் தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து கடன் சுமை அதிகரித்துள்ளது.

மேல கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் பகுதியில் அலெக்ஸ் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அதற்கான கடன் தவணை தொகையை விக்டோரியாவின் தாயாருக்கு வந்த பென்ஷன் தொகையில் இருந்து செலுத்தி வந்துள்ளனர். சமீபத்தில் விக்டோரியாவின் தாயார் இறந்து விட்டதால் பென்ஷன் தொகை கிடைக்கவில்லை. இதனால் வீடு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அலெக்ஸ் மற்றும் விக்டோரியா மன உளைச்சலில் இருந்துள்ளனர். கடன் சுமை அதிகரித்ததால் மனம் வெறுத்துப்போன அலெக்ஸ் மற்றும் விக்டோரியா, தங்கள் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்வதென முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. "குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்ததோடு அலெக்ஸ் விக்டோரியாவும் தூக்கிட்டு வீட்டிற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர். 

Trending News

Latest News

You May Like