ஒரு பக்கம் கடன் சுமை.. மற்றொரு பக்கம் மகனின் உடல் நிலை.. 3 பேரை கொன்று உயிரை மாய்த்த தந்தை..!

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (85). இவர் பெங்களூரு விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது சேலத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி வசந்தா (56). இவர்களது இரண்டாவது மகன் திலக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (38). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கொரோனா காலத்தில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரும் திலக், வாய் பேச முடியாத தனது 6 வயது மகன் சாய் கிரிசாந்த்தை நினைத்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகனின் மருத்துவ செலவு மற்றும் ஆன்லைன் வர்த்தகம் செய்ய திலக் அதிக அளவிலான கடன்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொடர்பான புகார்களின் அடிப்படையில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. ஒரு பக்கம் கடன் சுமை, மற்றொரு பக்கம் ஒரே மகனின் உடல் நிலை என மன அழுத்தத்தில் இருந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதனையடுத்து, நேற்று இரவு திலக் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் ஆகிய 4 பேருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் மகேஸ்வரி பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு அது குறித்து வாட்ஸ்அப்பில் தகவல் கூறியுள்ளார். இதனால், பதறிப்போன சந்துரு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார்.
இன்று அதிகாலை இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது, வீட்டில் சிவராமன், திலக், மகேஸ்வரி மற்றும் சாய் கிரிசாந்த் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், உயிருக்கு போராடிய நிலையில், திலகின் தாய் வசந்தா மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் கன்னங்குறிச்சி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடி வந்த வசந்தா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.