1. Home
  2. தமிழ்நாடு

அதிபயங்கர நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது..!

Q

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. சகாயிங் நகரின் வடமேற்கே, 16 கி.மீ., தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இதன் அதிர்வுகள் தென்மேற்கு சீனா மற்றும் தாய்லாந்தில் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களில், 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம், மியான்மரை அதிரச் செய்தது. இது, மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலே அருகே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நய்பிடாவ், மண்டாலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை மியான்மர் ராணுவ அரசு அறிவித்தது. மண்டாலே நகரத்தின் அருகே இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த, 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது.
இந்த அதிர்வுகளால் கட்டடங்கள் சரிந்ததில், மியான்மரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தொட்டது. 2000 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் இன்று (மார்ச் 29) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் பாங்காக்கில் வானுயர்ந்த கட்டடங்கள் குலுங்கின. கட்டுமானப் பணி நடந்து வந்த 30 மாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்ததில், 10 பேர் உயிரிழந்தனர்; 90க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் பும்தம் வெசாயசாய் தெரிவித்தார்.
இந்தியா உதவிக்கரம்
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கவலை அளிக்கிறது. அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உதவிக்கரம் நீட்ட தயார் நிலையில் இருக்கும்படி நம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுகளுடனும் நம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரணம் அனுப்பிய இந்தியா!
கடும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மியான்மருக்கு, அவசர உதவியாக, 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.

Trending News

Latest News

You May Like