இனி பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை..!
போபாலில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதைக்காக நமது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு (பாலியல் வன்கொடுமை) மரண தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளை கட்டாய மத மாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
சிறுமிகளை கட்டாய மத மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு மத்தியப் பிரதேசத்தின் மதமாற்றத் தடைச் சட்டம் 2021-ல் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.” என்றார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினருமான விவேக் தன்கா தெரிவித்ததாவது:
”தவறான வழிகளில் மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். இது ஏற்கெனவே சட்டத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அரசிலமைப்பு ரீதியான கண்ணோட்டத்தில் தூக்கிலிடுவது சாத்தியமல்ல. முதல்வர் தனது தீவிர ஆதரவாளர்களை திருப்திபடுத்த முயற்சிக்கிறார்.” என்று தெரிவித்தார்.