1. Home
  2. தமிழ்நாடு

மாணவி ஸ்ரீமதி மரணம்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!

மாணவி ஸ்ரீமதி மரணம்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவருடைய தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், ‘இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும்; கலவரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மாணவி இறப்பு குறித்து ஊடக விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்ட பின்னும், சில மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம், நேர்காணல் எடுத்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பின்னும், நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். வழக்கறிஞராக இருந்து கொண்டு, இதுபோல தனியாக விசாரணை நடத்துவது, வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல.

மாணவி இறப்பு விவகாரம் குறித்து, ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் தயங்காது.

மாணவி இறப்பு விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு சிறப்பு புலனாய்வு குழு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

தவறான தகவலை பரப்பும் சமூக ஊடகங்கள், நபர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை விரைந்து தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

புகார்தாரரே குற்றம் சாட்டப்பட்டவராக மாறுகிற சம்பவங்களையும் இந்த நீதிமன்றம் தன் அனுபவத்தில் பார்த்து உள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் இடைக்கால அறிக்கையில், பல சூழல்கள் குறித்து வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த வழக்கின் விசாரணை முழுமையாக முடியாத நிலையில், தற்போது அதைப் பற்றி கூற முடியாது. விசாரணை செப்டம்பர் 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like