சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! 15 நாட்கள் விடுமுறையில் இருந்த அரசு மருத்துவரிடம் 4 மணி நேரம் விசாரணை.

ஊரடங்கு விதிகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், சிறையில் அவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கை சிபிஐ எடுக்கும் வரை , சிபிசிஐடி விசாரிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி , விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சிறை செல்வதற்கு முன்னதாக, அவர்களை பரிசோதித்து உடல் தகுதி சான்று வழங்கிய அரசு மருத்துவர் விணிலா 15 நாட்கள் விடுப்பில் இருந்தார்.
விசாரணை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் , சாத்தான் குளம் அரசு மருத்துவர் விணிலா மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜரானார். திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான அவரிடம் சுமார் 4 மணி நேரம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
Newstm.in