நாளை மறுநாள் தவெக மாநாட்டு பூஜை..!
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போயுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் தான் கட்சி கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூமி பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.பூமி பூஜைக்கு பின் மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.