1. Home
  2. தமிழ்நாடு

நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!

1

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது, கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழையும், வருகிற 25-ம் தேதி முதல் 28-ந் தேதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25ம் தேதி) புயலாக உருவாகக்கூடும். இந்த புயலுக்கு ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி "ரீமால்" என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ’மணல்’ என அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புயல் 26-ம் தேதி மாலை மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதை அடுத்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்திற்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரீமால் புயல் கரையைக் கடந்த பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரீமால் என்ற இந்த பெயரை, ஓமன் நாடு பரிந்துரைத்துள்ளது. 

இதற்கிடையே இன்று (மே 24) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like