மிரட்டும் மிக்ஜம் புயல் : குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை…!
மிக்ஜம் புயலால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகின்றன. பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 14 முக்கிய சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதால் பேருந்துகளின் போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு வெளியே செல்லும் மக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை கூட இயக்க முடியாத அளவுக்கு சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே காவல்துறை தடுப்புகள் அமைத்து வெள்ளம் நிறைந்துள்ள பாதைகளை மக்கள் பயன்படுத்துவதை எச்சரித்து மாற்றுப் பாதைக்கு திருப்பி விடுகின்றனர். பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பெருமளவு மக்கள் வெளியே செல்வது குறைவாக காணப்படுகிறது. சாலைகளும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் பெரிதளவு பாதிப்படைந்துள்ளனர்.
எனவே வழக்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. நகர் பகுதி முழுவதும் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 2600 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 320 பேருந்துகள் என்ற அளவில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு பழுதாகி நின்றுள்ள காட்சியும் காண முடிகிறது. மரங்கள் முடிவு மின்கம்பங்கள் பாதிப்பு போன்றவற்றால் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.