டிஜிட்டல் கைது எனும் சைபர் மோசடி..! ரூ.11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை .!
பெங்களூரு மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார் குமார்.
குமாருக்கு கடந்த சில நாட்களுக்குமுன் செல்போனில் மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னை சிபிஐ அதிகாரி விக்ரம் கோஸ்வாமி என்று அறிமுகப்படுத்திய அந்த நபர் பணமோசடி வழக்கில் உங்களை கைது செய்ய வாரண்ட் உள்ளதாக குமாரை மிரட்டியுள்ளார். மேலும், வழக்கில் உங்களை டிஜிட்டல் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். வழக்கில் இருந்து தப்பிக்க குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் பணம் செலுத்துமாறு அந்த நபர் கூறியுள்ளார். தான் மோசடி வலையில் சிக்கியுள்ளதை அறியாத குமார், இதுகுறித்து யாரிடமும் தெரியப்படுத்தாமல் மர்ம நபர் குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் 11 லட்ச ரூபாய் வரை டெப்பாசிட் செய்துள்ளார்.
ஆனாலும், அந்த நபர் குமாரை தொடர்ந்து மிரட்டி மேலும் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனால், விரக்தியடைந்த குமார் நேற்று தனது கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு டிஜிட்டல் கைதே காரணம் என்றும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.