சைபர் க்ரைம் வார்னிங்..! பிரபலங்கள் பெயரை பயன்படுத்தி மோசடி..!

தமிழ்நாடு சைபர் க்ரைம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இதுவரை, ஸ்ரேயா கோஷல் சில வர்த்தக தளங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கொண்ட 25 எக்ஸ் பதிவுகளை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை சைபர் க்ரைம் போலீசாரால் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான போலியான பதிவுகளை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட சில பெயர்கள் "நியூஸ் பல்ஸ், ஹாஃப் பிரைஸ் ஷாப், ஆசம், சினிமாக்குத்தூசி என்றும், இந்த பதிவுகளில் "மேலும் அறிக" என்பதை கிளிக் செய்யும்பொழுது போலி செய்திகளை சித்தரிக்கும் Express247.com, news.mirroruserestart.today, indiantodaynewsp.com, fxroad.com போன்ற வெப்சைட்டுகளுக்கு அழைத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிரபலங்கள் பற்றி பரபரப்பான தலைப்புச் செய்திகளைப் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், பயனர்கள் இந்த இடுகைகளைக் கிளிக் செய்யும் போது, அவை உண்மையானதாகத் தோன்றும் போலி செய்தி வலைத்தளங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மார்ஃப் செய்யப்பட்ட படங்கள் மற்றும் குறிப்பிட்ட முதலீடு அல்லது வர்த்தக தளங்கள் மூலம் அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள் என்ற தவறான கூற்றுக்கள் உள்ளன என்றும் அவற்றில் போலி முதலீட்டு வலைத்தளங்களுக்கான இணைப்புகளும் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான லிங்குகள் அல்லது பதிவுகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும் என்றும், சரிபார்க்கப்படாத ஆதாரங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்கள் அல்லது வர்த்தக தளங்கள் பொது நபர்களால் அங்கீகரிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது நம்பகமான ஊடகங்கள் மூலம் செய்திகள் மற்றும் விளம்பரங்களை சரிபார்க்கவும் என்றும், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத அல்லது ஒழுங்குபடுத்தப்படாத வலைத்தளங்கள் அல்லது தளங்களில் தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் என்றும் சைபர் க்ரைம் அட்வைஸ் செய்துள்ளது.