வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் கிடந்த புழு!
ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே ஆம்பூர் பிரியாணி ஓட்டல் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில், குடியாத்தம் சந்தப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், மூன்று குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குடும்பத்தினர், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டனர். மேலும் குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்ததால், சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஓட்டல் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆம்பூர் நகர போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர், சென்னை பகுதிகளில் செயல்படும் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடைகளில் புழுக்கள் இருந்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் சில கடைகளில் பிரிட்ஜ்களில் கறியை பதுக்கி பிரியாணி செய்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுபோன்ற தரமற்ற கறி மற்றும் பிரியாணி விற்பனை செய்து வரும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்