மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு அமல்..!
மணிப்பூர் மாநிலம், ஜிரிபம் மாவட்டத்தில் காணாமல் போன 6 பேர் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இம்பால் மேற்கு மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி கூறுகையில்,
லாம்பெல் சானகீதெல் பகுதியில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சபம் ரஞ்சனின் இல்லத்தை ஒரு கும்பல் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் இம்பால் மேற்கு மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்குமார் பிறப்பித்த உத்தரவின்படி, இன்று மாலை 4.30 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, என்றார்.
நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சுசிந்த்ரோ சிங்கின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இம்பால் மேற்கு மாவட்டத்தின் சகோல்பந்த் பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள், முதல்வர் என் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆர்.கே.இமோவின் இல்லம் முன்பு கூடி, அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்' எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
அந்த கும்பல் அலுவலக கட்டிடத்தின் முன் இருந்த சில தற்காலிக கட்டிடங்களை இடித்தனர். இதனால், மணிப்பூர் மாநிலம் முழுவதும் பதட்டம் நீடித்து வருகிறது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.