படுதோல்வியை சந்தித்த சிஎஸ்கே.. பிளே ஃஆப் கனவு தளர்ந்தது..

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
அடுத்து 4 போட்டிகளிலும் கட்டாயம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றால் பிளேஃஆப் சுற்றுக்கு தகுதி பெற சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு இருந்தது. இத்தொடரின் முதல் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இதில் சென்னை அசத்தல் வெற்றிபெற்றதால், பழிதீர்க்க மும்பை அணி காத்திருந்தது. இதனால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ்யில் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் (0), டு பிளிஸ்சிஸ் (1) என அவுட்டாகி தொடக்கமே அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்துவந்த, அம்பதி ராயுடு (2), ஜெகதீசன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல அதன்பின் விக்கெட் மளமளவென சரிந்தது.
ஜடேஜா 7 ரன்னிலும், டோனி 16 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை 6.4 ஓவரில் 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. எனினும் சாம் கர்ரன் தனிநபராக போராடி 47 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடிக்க சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி சார்பில் போல்ட் 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இஷான் கிஷன் அதிரடி காட்ட, டி காக் நிதானமாக விளையாடினார்.
இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரிலேயே 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் 37 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 68 ரன்களுடனும், குயின்டான் டி காக் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த தோல்வியின் மூலம் இந்தாண்டு சென்னை அணிக்கு பிளே ஃஆப் கனவு சுக்குநூறாக நொருங்கியது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
newstm.in