மும்பை ரசிகர்கள் தாக்கியதில் CSK ரசிகர் பலி..!

கடந்த 27ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியை காண ஹன்மந்த்வாடி கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பலரும் கூடி இருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகர்களான பல்வந்த் மகாதேவ் ஜான்ஜ்கே (வயது 50), சாகர் சதாசிவ் ஜான்ஜ்கே (வயது 35) ஆகியோரும் அங்கே போட்டியை பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இது தான் மிக அதிக ஸ்கோர் ஆகும். அவ்வளவு பெரிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணியால் எட்ட முடியாது என்பதால் பல்வந்த் மகாதேவ் மற்றும் சாகர் சதாசிவ் கோபத்தில் இருந்துள்ளனர். அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்த போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்து சென்றார். அப்போது சிஎஸ்கே ரசிகரான பந்தோபந்த் பாபுசோ திபிலே அங்கே போட்டியை காண வந்திருக்கிறார்.
ரோஹித் சர்மா அவுட் ஆனதை பார்த்து, "ரோஹித் சர்மா போய்விட்டார். இனி மும்பை எப்படி ஜெயிக்கும்?" எனக் கூறி இருக்கிறார். பின்னர் அவர் சிஎஸ்கே அணியை பாராட்டி பேசி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் பல்வந்த் மகாதேவ் ஜான்ஜ்கே (50), சாகர் சதாசிவ் ஜான்ஜ்கே (35) அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.