மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி..!

3வது லீக் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னையில் பிரீமியர் லீக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியையொட்டி, இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் பாடிய பாடல்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களை வைப் ஆக்கியது.
தொடர்ந்து, டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் ஷர்மா, முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவரது விக்கெட்டை கலீல் அகமது கைப்பற்றினார். தொடர்ந்து, 3வது ஓவரில் ரிக்கெல்டன் (13) விக்கெட்டை கலீல் கைப்பற்றினார்.
தொடர்ந்து, இந்த சீசனில் சென்னை அணிக்காக அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ் (11) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதனால், மும்பை அணி 36 ரன்னுக்கே 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நூர் அகமது வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவை (29) கண் இமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்து தோனி அவுட்டாக்கினார்.
தொடர்ந்து, திலக் வர்மா (31), மின்ஸ்(3), நமன் தீர் (17) ஆகியோரின் விக்கெட்டை நூர் முகமது கைப்பற்றி அசத்தினார். சென்னை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால், மும்பை அணியால் ரன் குவிக்க முடியவில்லை. கடைசியில் தீபக் சாஹர் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். அவர் 15 பந்துகளுக்கு 28 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் நூர் முகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், அஸ்வின், எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி ஓப்பனர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி பேட்டிங் செய்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா கடைசி வரை அவுட் ஆகாமல் 65 ரன்கள் குவித்தார். ஆனால் மறுபக்கம் ஆடிய ராகுல் வெறும் இரண்டு ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்கள் விளாசி அசத்தினார். ஷிவம் டூபே 9 ரன்கள், தீபக் ஹூடா 3, சாம் கர்ரன் 4, ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்தபடியாக அரங்கம் அதிர தோனி களமிறங்கினாலும் ரன்கள் எதுவும் அவர் எடுக்கவில்லை. 6 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதியாக ஒரு சூப்பர் சிக்சரை அடித்து ஃபினிஷ் செய்தார் ரச்சின் ரவீந்திரா. இதன்படி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே.