நெல்லையில் கொடூரம்! கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி...!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் நெசவாளர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி முத்துலட்சுமி (34). இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என 4 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பாலசுப்பிரமணியனுக்கும் அவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 20 நாட்களுக்கு முன்பு பாலசுப்ரமணியனிடம் தகராறில் ஈடுபட்ட முத்துலட்சுமி, கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அது மட்டுமின்றி, நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் பாலசுப்ரமணியன் மீது புகார் அளித்துள்ளார்.
அப்போது இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், நான்கு நாட்களாக முத்துலட்சுமி கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று (மே 30) மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, பாலசுப்பிரமணியன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில், இடுப்பு பகுதியில் காயமடைந்த பாலசுப்பிரமணியன் அலறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே தகவலறிந்து வந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் முத்துலட்சுமியைக் கைது செய்துள்ளனர்.