கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம்..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூலம் கிரிக்கெட் உலகில் வெளிச்சம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், மத்தியப்பிரதேச மாநிலத்துக்காக விளையாடி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது அவரால் கேகேஆர் அணிக்கு அழைத்து வரப்பட்டார் வெங்கடேஷ் ஐயர். தொடர்ந்து தனது அட்டாக்கிங் திறமையால் ரசிகர்களை கவர்ந்த வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் தொடரில் நிரந்தர இடம்பிடித்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கோப்பை வெல்ல வெங்கடேஷ் ஐயரும் முக்கிய பங்கு வகித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 52 ரன்களை விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மொத்தமாக நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, சுமார் 158 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 370 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 70 ரன்களை விளாசி இருந்தார். கோப்பை வென்ற மகிழ்ச்சிக்கு மத்தியில் தற்போது திருமண வாழ்க்கையிலும் இணைந்து இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார் வெங்கடேஷ் ஐயர்.
தனது காதலி ஷ்ருதி ரகுநாதனை இன்று உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். கொல்கத்தா அணியின் சக வீரர்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அவரது திருமணத்தில் பங்கேற்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தம்பதியினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் வெங்கடேஷ் ஐயர் – ஷ்ருதி ரகுநாதன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இன்று பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்தியாவின் NIFT-ல் பேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஷ்ருதி, தற்போது பெங்களூருவில் உள்ள லைஃப் ஸ்டைல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.