1. Home
  2. தமிழ்நாடு

இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி: முதல்வர் ஸ்டாலின்..!

1

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது.  அதன் விளைவாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடும் கையெழுத்தானது.

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில்,  ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின்,  திமுக குழு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  சிபிஎம் குழுவினர் இதில் கலந்துகொண்டனர். இந்நிலையில்,  மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,  மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலை நாளை  நடைபெற உள்ள மாநில குழு கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இந்நிலையில் இந்த முறை மீண்டும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்,  சு.வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  அதேபோல்,  திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி மற்றும் பாலபாரதி ஆகியோரில் ஒருவர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும்,  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும்,  வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வந்த,  பெ.சண்முகமும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like