1. Home
  2. தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு..! நாளை தண்டனை விவரம் அறிவிப்பு..!

11

ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவுபெற்ற நிலையில்,  தீர்ப்பை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்றே தண்டனை விவரத்தை அறிவிக்க வேண்டும் என அரசு தரப்பு வாதம் செய்யப்பட்டது. ஆனால், நிர்மலா தேவி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், "தண்டனை விவரத்தை நாளை அறிவிக்க வேண்டும். தீர்ப்பு கூறிய அன்றே தண்டனையை கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்" என வாதாடினார்.இதையடுத்து பேராசிரியை நிர்மலா குற்றவாளி என தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் கூறியுள்ளது.

Trending News

Latest News

You May Like