முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது மார்ச் 28-ல் தீர்ப்பு..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 21(நேற்று) வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை இன்று (மார்ச் 22) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 28-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், ‘செந்தில் பாலாஜியிடம் 67 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. அமலாக்கத் துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.