1. Home
  2. தமிழ்நாடு

ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

1

திருச்சியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 79). இவர், 1989 - 1993ம் ஆண்டு காலக்கட்டத்தில், துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி(வயது 65), என்பவர் பெயரிலும் 32 லட்சத்து, 25 ஆயிரத்து 532 ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2001-ம் ஆண்டு ஆக.,17ல் அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகாபதி, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளார்.

இந்த வழக்கின் புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போதைய டி.எஸ்.பி., மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சேவியர்ராணி, எஸ்.ஐ., பாஸ்கர் மற்றும் சிறப்பு அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆகியோரால் இந்த விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார்.

விசாரணை முடிவில், முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும், முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தும் அதை அரசுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like