சாலையில் 14 மணி நேரம் மகளையும் , மகனையும் தோளில் சுமந்து வந்த தம்பதி !!

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 24 ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. ஊரடங்கு விதிப்பதற்கு முன்பாக மரம் வெட்டுவதற்காக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்திற்கு சென்ற புதுச்சேரி மாநிலம் வானூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் தனது மனைவி, மகன் மற்றும் மகளோடு சென்றுள்ளனர்.
மரம் வெட்டும் வேலை முடிந்த பிறகு ஊரடங்கு காரணமாக எவ்வித போக்குவரத்தும் இல்லாததால் அங்கேயே தங்கியிருந்துள்ளனர். அவர்கள் தனது வீடுகளுக்கு செல்வதற்காக முடிவெடுத்து நேற்று இரவு 8 மணிக்கு பேரம்பாக்கத்திலிருந்து தலையில் பைகளை சுமந்தவாறு தனது ஊருக்குச் செல்வதற்காக நடந்து சென்றனர். அதில் முருகன் ரேவதி தம்பதியினர் அவர்களது 6 வயது மகளையும் 10 வயாது மகனையும் பல கிலோ மீட்டர் தூரம் மாற்றி மாற்றி தோளில் சுமந்தவாறு வந்தனர்.
இன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் வந்தபோது , விஜயராகவன் என்ற சமூக ஆர்வலர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து , உணவு கொடுத்து அமர வைத்து சார் ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு தகவல் அளித்தார். உடனே விரைந்து வந்த சார் ஆட்சியர் சரவணன் அவர்களைப் பற்றி விசாரித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் முக கவசம் அணிய வைத்து தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்களை அளித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில்,துணை காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் நடராஜன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி உட்பட அனைவரும் வந்திருந்து அந்த பழங்குடியின மக்களை தனியார் பள்ளி வாகனத்தை வரவைத்து அதில் அவர்களை ஏற்றி அனுப்பினர்.
அதே நேரத்தில் வந்த மற்றொரு தம்பதியினரும் திருவண்ணாமல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களையும் வாகனத்தில் ஏற்றி அனுப்பினர். மேலும் சார் ஆட்சியர் சரவணன் அந்த பழங்குடியினருக்கு தனது சொந்தப் பணத்தில் தலா ஆயிரம் கொடுத்து அனுப்பினார். அதிகாரிகள் தேவையான உதவிகள் செய்து , எங்களின் சொந்த ஊருக்கு செல்ல வேன் ஏற்பாடு செய்தார். எங்கள் வாழ் நாளில் இதை என்றென்றும் மறக்க மாட்டோம் என்று கண்ணீர் மல்க கூறினார்கள் அக்குடும்பத்தினர்.
அனைத்து மாநில அரசுகளும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று தான் கூறுகின்றது. அதையும் மீறி சிலர் இது போல் சாலையில் நடந்து வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இது போல் செல்லும் போது அவர்கள் உடல் நிலை மோசமடைந்து சிலர் இறந்து விடுகின்றனர். ஆகவே யாரும் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டு கொள்கின்றனர்.
Newstm.in