உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நூதன முறையில் பணமோசடி - தம்பதி கைது..!

கோவையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர், நல்லாம்பாளையம் சாலையில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை மூட தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவருடைய கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர், சக்திவேலிடம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்ததாக கூறியிருக்கின்றனர். மேலும், “ஏ.டி.எம் கார்டு இருப்பதால் பணம் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்துவிட்டோம்.
இங்கு ஏ.டி.எம் மில் பணம் எடுக்க சென்றபோது எங்களது கார்டு வேலை செய்யவில்லை. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற அவசரமாக 2,000 ரூபாய் தேவைப்படுகிறது. உங்களிடம் கையில் இருக்கும் பணத்தை கொடுத்தால் எங்களது செல்ஃபோனில் இருந்து ஜி பே மூலம் உங்களுக்கு பணத்தை அனுப்பி விடுகிறோம்” என்று கூறி உள்ளனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தேவை என்று கூறியதை நம்பி சக்திவேல் அவர்களிடம் 2,000 ரூபாய் பணத்தை கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக்கொண்டவர்கள், ஜி பே மூலம் பணத்தை அனுப்பிவிட்டதாகக் கூறி, தங்களது செல்ஃபோனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்துள்ளனர். அதைப் பார்த்து அவரும் பணம் தன்னுடைய அக்கவுண்டிற்கு வந்துவிட்டதாக நம்பியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் இன்னும் ரூபாய் இரண்டாயிரம் கூடுதலாக கொடுத்தால் அதையும் ஜி பே மூலம் அனுப்பிவிடுவதாக கூறியுள்ளனர். அதை நம்பி அவர் மீண்டும் 2,000 ரூபாய் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார். உடனே அவர்கள் ஜி பே மூலம் அனுப்பிவிட்டதாகக் கூறி மீண்டும் செல்ஃபோனில் குறுஞ்செய்தியை காண்பித்துவிட்டு சென்றுள்ளனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகு சக்திவேல் தனது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்த்திருக்கிறார். அப்போது அவரிடம் பணம் வாங்கிய தம்பதி அனுப்பியதாக கூறிய பணம் தனது வங்கிக் கணக்கிற்கு வரவில்லை என்பதும், தான் 4 ஆயிரம் ரூபாயை இழந்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சக்திவேல் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் இதேபோல் மேலும் பலரிடம் அந்த தம்பதி ஜி பே மூலம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் சரவண சுந்தர் மோசடி தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோசடி தம்பதி வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில், அந்த தம்பதி சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஷர்மிளா பானு என்பதும், அவர்கள் இரண்டு பேரும் காதலித்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
அந்த தம்பதியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், இதுவரை மொத்தம் 112 பேரிடம் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தம்பதியரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான ரிஸ்வான் முன்பு கால் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஒரு டிரைவர் நூதன முறையில் பணத்தை இழந்ததாகக் கூறினார். அதாவது செல்ஃபோனில் ஜி பேவில் பணம் அனுப்பும்போது பே மற்றும் ரிக்வஸ்ட் என இரண்டு குறியீடுகள் வரும். அதில் பே என்று குறியீட்டை அழுத்தினால் பணம் போகும். அதுவே ரெக்வஸ்ட் என்று அழுத்தினால் பணம் போகாது.
உங்களிடம் பணம் கேட்கிறார் என்று குறுஞ்செய்தி மட்டும் வரும். இதை சிலர் சரியாக கவனிக்காமல், பணம் வந்துவிட்டதாக நினைத்து விடுகிறார்கள் என்று சக ஓட்டுநர் ரிஸ்வானிடம் கூறியுள்ளார். இதை தெரிந்து கொண்ட ரிஸ்வான், தனது காதல் மனைவியுடன் சேர்ந்து பலரிடம் நூதன முறையில் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளார்.
பணம் இழந்தவர்கள் செல்ஃபோனில் தொடர்புகொண்டால், உடனே அவர்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி அந்த எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்துள்ளனர். சிறிய தொகைதானே என்று பலரும் புகார் செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து பலரிடம் மோசடியை அரங்கேற்றியதுடன் போலீசிலும் சிக்காமல் தப்பி வந்துள்ளனர்.
வாடகை வீட்டில் வசித்து வந்த காதல் தம்பதி மோசடி செய்த பணத்தில் சொகுசு பொருள்கள் வாங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.