ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்.. தொழில்துறை அமைச்சர் கைது..!
பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தியது.
இதையடுத்து, இந்த நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன், 100 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளதால் அமலாக்கத் துறையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இறங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதன்போது, மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.