சிறார்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி!!

15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நாளை முதல் 15 - 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தினை சென்னை அடுத்த போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளை வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க துணை சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், 2007 மற்றும் அதற்கு முன் பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களின் பட்டியலை அரசு, தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகங்கள் தயார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியுடைய சிறார்கள் கோவின் செயலியில், ஆதார் கார்டு அல்லது பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி சனிக்கிழமை தொடங்கியது.
33.46 லட்சம் பேர் தகுதியானவர்கள் என கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவருக்கும் வரும் 3ஆம் தேதி தொடங்கி அடுத்த 6 நாட்களுக்குள், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஆசிரியர் ஒருவரை, சிறப்பு அதிகாரியாக, தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்த, பள்ளிகளில் போதிய இடவசதியை ஏற்படுத்தி தருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பொது சுகாதார இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in