சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. 2ஆம் நிலை பரவலா என அச்சம் !

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாள்ஒன்றுக்கு 5,500ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில் சென்னையில் குறைந்து காணப்பட்டது.
இதனால் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துவருவதாக கருதப்பட்டது. மற்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தே வந்தன.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக 1000-க்கும் கீழ் பதிவாகி வந்தது. ஆனால் கடந்த 24ஆம் தேதி 1,089 பேரும், 25ஆம் தேதி 1,193 பேரும், 26ஆம் தேதி 1,187பேரும் பாதிக்கப்பட்டனர். இதற்கு ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக அண்ணா நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையார், தேனாம்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில்தான் தற்போது தொற்று அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், முகக்கவசம் அணியாதது, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்றவற்றுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை ரூ.2 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்படும் எனவும் கூறினர்.
மேலும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழகத்திலிருந்து கொரோனாவை விரட்ட முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
newstm.in