53 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளிக்கு ஒரு வாரம் லீவு.. 3வது அலை அச்சத்தில் மக்கள்..!

ஒடிசா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 53 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளி ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்களைத் தவிர எம்பிபிஎஸ் பயிலும் 22 மாணவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா 3ம் அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒடிசா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கிய சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டது. இது, தொற்றுநோயின் மூன்றாவது அலை பரவ காரணமாக இருக்கப்போவதாக பலரும் எச்சரித்தனர்.
அதிகாரிகள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பரவல் விகிதத்தை கட்டுப்படுத்த முடியும் என்று வலியுறுத்துகின்றனர். கடந்த சில நாட்களில் ஏராளமான மக்கள் கோவிட்-19 தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில், சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 53 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்களைத் தவிர, சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (VIMSAR) புர்லாவைச் சேர்ந்த 22 எம்பிபிஎஸ் மாணவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 70 பேர் குழந்தைகள் என்று சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார். இரண்டு பேர் கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,396 ஆக உள்ளது.
முன்னதாக, செயின்ட் மேரிஸ் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளி ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் தொற்று விகிதம் இப்போது 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 2,191 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாநிலத்தில் இதுவரை 1.45 கோடிக்கும் அதிகமான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்பினால் கொரோனா 3ம் அலை பரவல் குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.