கோர விபத்து.. சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் 4 பேர் பலி: 4 பேர் படுகாயம்..!

பெங்களூருவில், அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்; படுகாயம் அடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பகுதியில், பெங்களூரு - துமகூரு நைஸ் ரோட்டில் ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த சரக்கு லாரி கண்டெய்னர் லாரியிம் மீது பயங்கரமாக மோதியது.
லாரி மோதிய வேகத்தில் பின்னால் வந்த 3 கார்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய கார் பன்னரக்கட்டாவில் இருந்து துமகூரு நோக்கி சென்றது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்த 4 பேர் குறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பெங்களூரு அருகே உள்ள பொம்மனஹள்ளியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களான முகமது பைதில் (25), அபிலாஷ் (25), ஷில்பா (30) என்பது தெரியவந்தது. விபத்தில் பலியான மற்றொரு பெண் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு காரில் வந்த 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து மேற்கு பிரிவு போக்குவரத்து டிசிபி குல்தீப் குமார் ஜெயின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்துக்கு காரணமான லாரி தமிழக பதிவெண் கொண்டதாக இருப்பதால் அது தமிழகத்தைச் சேர்ந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.