குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் தவறு தான் காரணம்..!!
குன்னூர் அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனிடையே இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை எனவும் அண்மையில் விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அவசர நிலை குறித்து விமானியிடம் இருந்து அருகில் உள்ள நிலையங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்த போதே விபத்து நேரிட்டுள்ளதால், விபத்துக்கு காரணம் விமானியின் பிழையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.