உஷார்..! இனி பாலம் உடைந்தால் ஒப்பந்ததாரர்கள் சிறைக்கு செல்ல வேண்டியது வரும் - அமைச்சர் துரைமுருகன்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குகைநல்லூர் என்ற இடத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக ரூ.12 கோடி 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் பேசியதாவது., தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மக்களுக்கான திட்டங்களை அரசு உருவாக்கி வழங்குகிறது. அதனை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும். மாயனூரில் முதன்முதலாக அணை கட்டப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அந்த பகுதியில் வேளாண் பயிர்கள் செழித்து வருகிறது. அதைப்போலவே தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பலன் தண்ணீர் தேங்கி நிற்கும் போது தான் மக்களுக்கு தெரியும்.
இந்த அணையானது 750 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வரும்போது ஐந்து அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் சுமார் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேக்கி வைத்த தண்ணீரை சிலர் வெள்ளிக்கிழமை திறந்து விட்டுள்ளனர். தடுப்பனையில் தண்ணீரை தேக்கி வைக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். ஆனால் இரவோடு இரவாக செக்டேமில் தேக்கி வைத்த தண்ணீரை சிலர் திறந்துவிட்டுள்ளனர்.
எனவே அணையைத் திறந்து தண்ணீரை வெளியேற்றிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 15 நாட்களுக்குள் அவர்கள் கைது செய்யப்பட்டு தொரப்பாடியில் உள்ள வேலூர் சிறையில் அடைக்கப்படுவார்கள். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணைகள் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் என்பது பேச்சுவார்த்தைக்கு அல்ல. சட்டத்தின் மூலம் பயம் இருக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்களை தடுக்க முடியும் என்று கூறினார்.
மேலும் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். இருந்த போதிலும் வெள்ளம் வரும்போதுதான் அணையின் உறுதித் தன்மை தெரிய வரும். வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும். தவறு புரிந்தவர்கள் நிச்சயம் சிறைக்கு சென்றாக வேண்டும்; ஒப்பந்ததாரர்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். அதிகம் வெள்ளம் வந்து தடுப்பணை சேதம் ஏற்பட்டால் தடுப்பணையை கட்டிய ஒப்பந்ததாரர்கள் சிறைக்கு செல்வார்கள் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.