கோவையில் ஒப்பந்த காவலர்கள் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டம்!
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்காவல் பணிக்குத் தனியார் செக்யூரிட்டி மூலம் 80-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் ஆஸ்பத்திரி நுழைவுவாயில், பல்வேறு சிகிச்சை பிரிவு வார்டுகள், அரங்குகள் உள்பட பல்வேறு இடங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் காவலர்கள் தங்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்குவது போன்று சம்பள நிலுவை தொகை வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஒப்பந்த காவலர்கள் 60க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாகப் போராட்டம் நீடிக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிற மாவட்டங்களில் வழங்குவது போலச் சம்பள நிலுவைத் தொகையைத் தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலாளிகள் மற்றும் பணியாளர்களை அரசு மருத்துவமனை உள் மருத்துவ அலுவலர் சந்தித்து பேசினார்.
அப்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளைக் கடிதமாக எழுதித் தாருங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.