தொடரும் கந்துவட்டி கொடுமை : திருவள்ளூரில் ஒரு குடும்பமே அழிந்தது..!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் வசித்த தம்பதியர் பிரகாஷ் (48), சரிதா (40). அதிமுக நிர்வாகியான பிரகாஷ் சொந்தமாக காரை வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில், பிரகாஷ் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள ராஜா என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.
இதற்கிடையே, தொழில் முடக்கம் காரணமாக அவரால் கந்து வட்டி கட்ட முடியவில்லை. இதையடுத்து, கடனை திருப்பித் தரக்கோரி ராஜா பிரகாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பண உதவி கேட்ட நிலையில் கிடைக்கவில்ல. இதையடுத்து இருவரும் இரு தினங்களுக்கு முன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் பிரகாஷ் உயிரிழந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சரிதாவும் உயிரிழந்தார். கோபம் கொண்ட உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், 40 பேர் நேற்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தம்பதியர் தற்கொலைக்கு காரணமான, ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா, நியாஷ் ஆகிய இருவரை கைது செய்ய வலியுறுத்தி கூச்சலிட்டனர். இருவரும் கைது செய்யப்படுவர் என போலீஸார் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் ஆரம்பாக்கம் போலீஸார் தேடி வருகின்றனர்.