தனியார் கூரியர் நிறுவனம் ரூ.13,103 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா, களப்பாகுளம், என்.ஜி.ஓ. காலனியைச் சார்ந்த அகஸ்டின் கோயில்சிஸ் என்பவர் கோயம்புத்தூரிலுள்ள கல்லூரியில் படித்து வரும் தனது மகளுக்காக மருத்துவர் பரிந்துரைத்த செயற்கைப் பற்கள் அடங்கிய ஒரு பார்சலை தனியார் கூரியர் நிறுவனத்தின் மூலம் சங்கரன் கோவிலிலிருந்து கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அப்பெண்ணிற்கு அந்த பார்சல் டெலிவரி செய்யப்படவில்லை. இதனால் புகார்தாரர் சம்மந்தப்பட்ட கூரியர் நிறுவனத்திடம் ஏன் பார்சல் டெலிவரி செய்யப்படவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனம் முதலில் டெலிவரி செய்யப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளனர். பின்பு புகார்தாரர் பல முறை அலைந்து கேட்ட பின்பு பார்சல் டெலிவரி செய்யப்பட எடுத்துச் செல்லும் போது தொலைந்து விட்டது எனக் கூறி விட்டனர்.
இதனால் பாதிப்படைந்த நுகர்வோர், வழக்கறிஞர் மூலம் கூரியர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்குத் தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் கூரியர் அனுப்பிய பார்சலின் கூரியர் கட்டணம் மற்றும் மதிப்புத் தொகை ரூ.3,103, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ரூ.5,000, வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.13,103 பணத்தை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.