மீனவர் பிரச்னைக்காக ராமேஸ்வரத்தில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: செல்வப்பெருந்தகை!
மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஜூன் 18 ஆம் தேதி கோட்டைபட்டிணத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், ஜூன் 23 ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜூன் 26ம் தேதி நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள், ஜூலை 1ம் தேதி பாம்பன் பகுதியை சேர்ந்த 25 மீனவர்கள், ஜூலை 4 ஆம் தேதி கோட்டைபட்டிணம், ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் இதுவரை 74 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 4 நாட்டு படகுகளையும், 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு தொடர்ந்து கடிதமும் எழுதி வருகிறார். ஆனாலும், மீனவர்கள் பிரச்னை என்னவோ தீர்ந்தபாடில்லை.
இந்த சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படை வசம் உள்ள 170-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளையும் விடுவிக்கக் கோரியும் சேதமடைந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவது போல், மத்திய அரசு தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும் பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்யக் கோரியும் போராட்டம் நடைபெறவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் பாரம்பரிய இந்திய மீனவர் நல சங்கத்தின் சார்பாக இன்று காலை இந்த ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்த செல்வப்பெருந்தகை, “இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ், எம்.பி.க்கள் விஜய் வசந்த, ராபர்ட் புரூஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
பாஜக ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்வதும், வழக்கு பதிவு செய்வதும், சிறையில் அடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகின்றன. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் எவ்வித இடையூறுமின்றி மீன்பிடிக்கின்ற உரிமையை மீட்டுத் தர வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது. இத்தகைய தமிழக மீனவர் விரோத போக்கை கண்டிக்கிற வகையில் பெருந்திரளான மீனவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.