1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சை பேச்சில் சிக்கிய காங்கிரஸ் தலைவர் : இரண்டு மனைவிகள் இருந்தால் ரூ.2 லட்சம் நிதியுதவி..!

1

மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காந்திலால் பூரியா போட்டியிடுகிறார். இந்நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட சைலானாவில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இதில், அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.அப்போது வேட்பாளர் காந்திலால் பூரியா பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும் என எங்கள் (காங்கிரஸ்) தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்றார்.

காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு, நீட், க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் வசம் ஒப்படைத்தல் போன்ற அறிவிப்புகளுடன் மகாலட்சுமி திட்டமும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மகாலட்சுமி திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள நிலையிலிருந்து உயரும் வரையில் அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.8,500 என ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது.இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியா, இந்தத் திட்டத்தைத் தொடர்புபடுத்தி இரண்டு மனைவி இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் என கூறியிருப்பது, பா.ஜ.க-விடமிருந்து விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது.

இந்நிலையில் 73 வயதான காந்திலால் பூரியா, பெண்களை அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like