வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு - காங்கிரஸ்
ஹிண்டன்பா்க் நிறுவனம் அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாகக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது.
இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லையென ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.
செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவைச் சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்குச் சரிவைச் சந்தித்தன.
சந்தை மதிப்பு சரிவால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
இந்நிலையில், செபி தலைவரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டத்தை வரும் 22 ஆம் தேதி நடத்த உள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “அதானியின் மெகா ஊழல்குறித்த விசாரணை செய்ய வேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாகச் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.