குவியும் வாழ்த்துக்கள்..! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா..!
உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக உலக சாதனை படைத்துக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா.
இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத் திட்டத்தையும் மிகச் சரியாகச் செய்து காட்ட வேண்டும் மற்றும் பிற மாணவர்களுக்குக் குறைந்தது 50 மணிநேர டேக்வாண்டோ வகுப்புகளை எடுத்திருக்க வேண்டும். இதைப் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
இந்தப் பதிவு கொரியாவில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும். அனைத்து டேக்வாண்டோ பாடத் திட்டத்தையும் மிகக் குறைந்த வயதில் கச்சிதமாகச் செய்து காட்டிய மாணவர் இந்தக் கின்னஸ் உலக சாதனைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சம்யுக்தா 7 வயது 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத் திட்டத்தையும் செய்து காட்டி இந்தச் சாதனைக்குத் தகுதி பெற்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் பட்டத்தைப் பெற்றார்.
டேக்வாண்டோவில் உலகின் இளம் வயது கின்னஸ் சாதனையாளர் என்ற சாதனையைப் படைத்ததற்காகச் சம்யுக்தாவை மதுரை டேக்வாண்டோ அகாடமியின் தலைமைப் பயிற்சியாளர் நாராயணன் பாராட்டினார்.