தங்கம், 10 லட்சம் பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு!

அனாதையாக கிடந்த பையை பொறுப்புடன் போலீஸில் ஒப்படைத்த இந்தியாவை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு அரசு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்தியரான ரிதேஷ் ஜேம்ஸ் குப்தா துபாயில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பை அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அதில் 14ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 10 லட்ச ரூபாய், மற்றும் 54,452 டாலர் மதிப்புள்ள தங்கம் இந்திய மதிப்பில் 39 லட்ச ரூபாய் ஆகியவை இருந்தன.
இதனையடுத்து ரிதேஷ், உடனடியாக அந்தப் பையை போலீஸில் ஒப்படைத்தார். ரிதேஷின் நேர்மையைப் பாராட்டிய துபாய் போலீஸார் அவருக்கு, ‘பொறுப்புள்ள குடிமகன்’ என்ற சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். துபாயில் உள்ள அல் குசாய்ஸ் போலீஸ் நிலையத்தின் இயக்குநர் பிரிகேடியர் யூசுப் அப்துல்லா சலீம் அல் அதிதி சான்று வழங்கி பாராட்டினார். ரிதேஷும் போலீஸுக்கு நன்றி தெரிவித்தார்.
அந்தப் பை யாருடையது என்று தெரியவில்லை. அந்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in