நீட் தேர்வு நாயகன் ஜீவித் குமாருக்கு குவியும் பாராட்டுக்கள் !

தேனி மாவட்டம், பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில், 720-க்கு, 664 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடந்த செப்டம்பர், 13 மற்றும் அக்டோபர் 14 ம் தேதி நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில், தமிழகத்தில், 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., வெளியிட்டுள்ளது. அதில், 7.71 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில், 720-க்கு, 664 மதிப்பெண் பெற்று, அபார சாதனை படைத்தார். அகில இந்திய அளவில், 1,823-ம் இடம் பிடித்துள்ளார். தேசிய அளவில், அரசு பள்ளி மாணவர்களில், அதிக மதிப்பெண் எடுத்த வர்களில், ஜீவித் குமார் முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த, 2018 - 19ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 படித்த ஜீவித் குமார், பிளஸ் 2 தேர்வில், 600க்கு, 548 மதிப்பெண் பெற்றுள்ளார். அப்போது, நீட் தேர்வு எழுதி, 720க்கு, 190 மதிப்பெண் பெற்றார்.இதனையடுத்து, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். அதில், 664 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற நீட் தேர்வுகளில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் யாரும் எடுக்காத அதிகபட்ச மதிப்பெண் இது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஜீவித்குமாரை பள்ளி கல்வி அதிகாரிகள் நேரில் பாராட்டினர். ஜீவித்குமாருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.