1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்... விமானத்தை இயக்கும் முதல் படுகர் இன பெண் ஜெயஸ்ரீ..!

1

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் படுகர் சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெருவாரியானவர்கள் தேயிலை மற்றும் மலைகாய்கறி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரியை அடுத்துள்ள குருக்கத்தியை சேர்ந்தவர் மணி. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். அவரது மனைவி மீரா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அதில் மகள் ஜெயஸ்ரீ தற்போது படுகர் இனத்தில் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த இவர், கோவையில் தனது பொறியியல் படிப்புகளை படித்தார். பின்னர் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த ஜெயஸ்ரீ, சிறுவயதில் தனது தாய் ஆசைப்பட்டது போல் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் விதமாக கொரோனா காலத்தில் ஐடி பணியை விட்டு விட்டு விமான பைலட் படிப்பை தொடர்ந்தார். அதற்கான படிப்பை ஆன்லைனில் தேடி பயின்றுள்ளார். முதலில் இந்திய அளவிலான பைலட் தேர்வில் வெற்றி பெற்றார். பின்பு செளத் ஆப்ரிக்காவில் தனது பைலட் பயிற்சியினை முடித்த ஜெயஸ்ரீ தற்பொழுது பைலட்டாகி உள்ளார்.

பைலட்டாக வேண்டும் என்ற மிகப்பெரிய கனவால் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே அதற்கான படிப்பை தொடர்ந்து படித்து வந்ததாகவும் பின்பு பைலட் பயிற்சிக்கு விண்ணப்பித்து சேர்ந்ததாகவும் ஆரம்பத்தில் கற்றுக்கொள்ள கடினமாக இருந்ததாகவும் அப்போது உடன் இருந்தவர்கள் ஊக்கம் அளித்து தன்னை உற்சாகபடுத்தியதாவும் கூறும் ஜெயஸ்ரீ தங்கள் படுகர் சமுதாயத்திற்கே பெருமை சேர்த்து உள்ளதாக தெரிவிக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களாக திகழும் படுகர் இன மக்களில் பெண்கள் ராணுவம், கப்பல்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் நிலையில், முதல் பெண் பைலட்டாக ஜெய் ஸ்ரீ தேர்வாகி உள்ளதால் அவரை மலை மாவட்டம் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like