TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பிரபல யூடியுபர் டிடிஎப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினார்.பைக் முழுவதுமாக சேதமடைந்த நிலையில் லேசான காயத்துடன் தப்பினார் டிடிஎஃப். எனினும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைதளில் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனையடுத்து டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பாலுச்செட்டி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு கீழமை நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ’இவரது வாகனத்தை ஏன் எரிக்க கூடாது?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் டிடிஎஃப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது என்பதால் ஜாமீன் தர வேண்டுமென அவரது தரப்பில் வாதிடப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த 3 வாரங்களுக்கு தினமும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.