விவசாயிகளுக்கு பிரத்யேக ஐடி கார்ட் : இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு..!
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்க முடிவு எடுத்து. விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை அறிய அடுத்த மாதம் பதிவு தொடங்க உள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளை பற்றிய விவரங்களை பதிவு செய்து பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது என மத்திய வேளாண் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒன்றிய அரசால் தரப்படும் இந்த அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு தான் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள் அனைத்தும் இனி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆதார் அட்டை எப்படி ஒரு நபருக்கு அனைத்து வகையான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதுபோல் அரசு வழங்க போகும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அரசால் செயல்படுத்தப்படும் விவசாயத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்” என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஒன்றிய அரசால் கொடுக்கப்பட உள்ள இந்த அடையாள அட்டைகள் நில உடமையாளர்கள் மற்றும் குத்தகை பதிவு உரிமை சட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று சுட்டிக்காட்டிய சிபிஐ, “இந்த அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் மானியம்; சலுகை; மற்றும் கடன் வசதிகள் கிடைக்கும். எஞ்சியவர்களுக்கு கிடைக்காது” என்பதையும் தெரிவித்துள்ளது.
குத்தகை சாகுபடி விவசாயிகளில் பெரும்பகுதியோர் தற்காலிக அல்லது ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சாகுபடி செய்யும் குத்தகையாளர்கள் ஆவர் என்றும், எனவே பெரும் பகுதியாக உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த அடையாள அட்டை கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பிஎம் கிசான் என்ற ஒன்றிய அரசின் விவசாயிகள் நல நிதி கூட இந்த குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை என்றும், இதுபோல் தான் இந்த திட்டமும் விவசாயிகளாக உள்ள அனைவருக்கும் பயன்படாது என்று சுட்டிய சிபிஐ, “இது கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாக இது அமையும். இதுதொடர்பாக கிராமங்கள் வரை சென்று திட்டத்தை விளக்கி விவசாயிகளின் கருத்தறிந்து செயலாக்கிட வேண்டும். எனவே இத்திட்டத்தை மறு ஆய்வு செய்து தொடக்கிட வேண்டும்” என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.